Wednesday, May 19, 2010

கண்ணீர் தீயாகிறது !

காலை ஏழு மணியிருந்திருக்கும். அனாஸ{க்கு வயிற்றுக்குள் என்னவோ செய்தது. தேனீர் கோப்பையை வைத்து விட்டு எழுந்து மலசலகூடம் செல்ல நினைத்தான். நினைக்கத்தான் முடிந்ததே தவிர போவதற்கு முடியவில்லை. ஏனெனில் கொழும்பில் பிரபலமான அந்தக்கடையில் சிற்றூழியர்களாய் வேலை செய்யும் இவன் போன்று ஆறு பேர், இவனுடன் இந்த அறையில் தான் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் நேரகாலத்துடன் எழுந்திருந்ததால் அவர்கள் வரும் வரை காத்துக்கிடக்க வேண்டிய கட்டாயத்தில் படுத்திருந்தான்.
மலசலகூடம் என்றால் அறையோடு இருக்கும் அட்டேச் பாத்ரூம் என்றோ, சகல வசதிகளுடன் கூடியதாக இருக்கும் என்றோ எண்ணினால் அதற்கு யாரும் பொறுப்பல்ல. மெதுவாக எழுந்து சோம்பல் முறித்த அனாஸ் காலைக் கடன்களை முடிக்க ஆயத்தமாகி பாத்ரூம் பக்கம் சென்றான். வசதியான இடத்தில் பிறந்து வளர்ந்த அவனுக்கு இப்படியெல்லாம் கஷ்டப்படுவது பெரும் வேதனையாக இருந்தது. கொஞ்ச நேரம் படுத்துக்கொள்ளலாம் என்று பாயில் வந்து சாய்ந்து கொண்டான்.
மனசைக் கல்லாக்கி;க் கொண்டு இவனைப் போலத்தான் மற்றவர்களும் இருக்கிறார்கள். சிலர் தம் மனைவி மக்களைப் பார்க்கவிருக்கும் ஆசையை வெளிப்படையாக கவலையுடன் கூறுவதை பல முறை கேட்டிருக்கிறான். வருடத்தில் இரண்டு தடவைகள் போய், நான்கு நாட்கள் இருந்து விட்டு வருவார்கள். சிலநேரம் போய் இரண்டு நாட்கள் ஆகும் போதே கடையில் வேலை இருப்பதால் வருமாறும், வராவிட்டால் சம்பளம் வெட்டப்படும் என்றும் அவர்களுக்கு தகவல் அனுப்பப் படுவதுண்டு.
இந்த வேலையை வீசி விட்டுப் போவதென்றாலும் முடியவில்லை. வறுமை அவர்களை கட்டிப் போட்டிருந்தது. வேலை தேடுவதென்பது இலகுவான காரியமல்லவே. ச்சீ என்ன வாழ்க்கை..இரண்டு மூன்று வருடங்ளாக இதே போல் அடிமையாக..!
உடம்புக்கு முடியாமல் படுத்திருந்தாலும் சம்பளம் வெட்டுவார்கள். சாப்பாட்டுக்கு போய் வர நேரமாகினாலும் சம்பளம் வெட்டுவார்கள்..இப்படியே நடந்தால் ஊழியர்களுக்கென்று என்ன மிஞ்சப் போகிறது?
முதலாளி என்றால்..இஷ்டப்பட்ட நேரத்துக்கு வீட்டுக்குப் போகலாம். சாப்பிடலாம். தூங்கலாம். ஏன் அதிகாரவர்க்கம் என்பதனாலா? அவர்கள் மட்டும் தான் மனிதர்களா? தமது மனைவி பிள்ளைகளுடன் இரண்டு மாதங்களுக்கொரு முறை சுற்றுலா போவார்கள். ஆனால் கடையில் வேலை பார்க்கும் சிற்றூழியர்கள் ஞாயிறு தினங்களிலும் வேலை செய்து முதலாளிக்கு உழைத்துக் கொடுத்தாலும் ஓரிரு நாளாவது அதிகமாக லீவு எடுத்து பிள்ளைகளுடன் இருந்து விட்டு வர முடியாது. என்னவொரு கொடுமை!
அனாஸ் பரவாயில்லை. தனிக்கட்டை. எனினும் ஆசாபாசங்கள் உள்ளவன் தானே. சிலருக்கு வயது வந்த பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து அவர்களது தேவைகளைக் கவனிக்கும் பொறுப்பு இருக்கிறது. மனைவிமார் ஒவ்வொரு விடயம் பற்றியும் விம்மலுக்கும் விசும்பலுக்கும் இடையே அறியத்தரும் போது எவ்வளவு கவலைப்படுவார்கள் இந்த ஊழியர்கள்? அப்படி அவர்கள் கவலைப்பட்டு ஒடிந்து போயிருக்கும் நேரங்களிலெல்லாம் இவனது நினைவலைகள் வீட்டைச் சுற்றியும் எட்டு மாதங்களுக்கு முன்புஹலீமாவைச் சுற்றியுமே ஆரத்தழுவி ஆர்ப்பாட்டம் போடும்.
வாப்பா!
கண்டிப்பு, கோபம், அன்பு எல்லாவற்றுக்கும் உறைவிடமானவர். வாப்பா மீது அனாஸ{க்கு மிகவும் மதிப்பு அதிகம். ஆனால் ஏழைகளை மதிக்காத அவர் குணம் மட்டும் அனாஸ{க்கு பிடிக்காது.
உம்மாவைப்பற்றி கேட்க வேண்டுமா? சிறு தலைவலிக்கும் என்னமாய் துடித்துப் போவார்? உம்மா ரொம்ப அழகானவரும் கூட. ஆனால் ரோஷக்காரி. அடிக்கடி வாப்பாவுடன் சண்டையிடுவாள். அவர்களை புரிந்து கொள்ளவே முடியாது. என்ன இவர்கள்? எதற்காகவாவது சண்டை பிடிக்கிறார்கள்..ஆஸ்ஊஸ் என்கிறார்கள். இரவில் சமரசம்...காலையில் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
இப்படி அனாஸ் நினைத்த போது அவனுக்கு ஆறு வயதிருந்திருக்கும். முதலில் புரியவில்லை. அவன் இளைஞனாகும் போது தான் அன்பின் ஊடுறுவலும் அதன் தாற்பரியமும் புரிந்தது. திருமணம் பற்றி புரியுமளவுக்கு அவனுக்கு படிப்பிருக்கவில்லையா அல்லது அவை மேல் பிடிப்பிருக்கவில்லையோ தெரியாது. ஆனால் ஹலீமாவை காணும் போது வாப்பாவின் பணக்கார குணம் தெரிந்தும்; அனாஸின் மனம் ஹலீமாவை நாடியது.
உன் புள்ள செய்திருக்கிற வேலய பாத்தியா? புள்ளய பெத்திருக்காளாம்..புள்ள!
ஆவேசமாக வாப்பா காட்டுக்கத்தல் கத்திய போது
ஏன்ட அல்லாவே என்று நடுங்கியவாறு ஓடி வந்தார் உம்மா.
போயும் போயும் ஒரு ஏழையனோட பழகுறான் கழுதை. இவனை இப்படியே விட்டால் நாசமாப் போவான் என்றார் அதே தோரணையுடன்.
பெற்ற தாயிடமே தன் பிள்ளை நாசமாப் போகும் என்று கணவனே கூறினாலும் தாயுள்ளம் தாங்குமா? வாப்பாவுடன் மல்லுக்கு நின்றாள். வாப்பா ஏழை என்று குறிப்பிட்டது ஹலீமாவின் தம்பியான றியாஸைத் தான் என்பது தெரிந்த போது சுருக் என்றது. அடிக்கடி றியாஸ{டன் பேசும் போதெல்லாம் பள்ளி ட்ரஸ்டி யாராவது கண்டு வாப்பாவிடம் போட்டுக் கொடுத்து விடுவார்கள்.
என்ன மனிதர்கள்? படைத்தவனுடைய இல்லாங்களிலேயே பதவி வகித்துக் கொண்டு அல்லாஹ்வின் படைப்பினங்களை அவமதிக்கிறார்களே..
ஹலீமாவை தன் மனைவியாக்கிக் கொள்ளவென்று தான் கட்டிய கனவுக் கோட்டைகள் படிப்படியாக சரியத் தொடங்கிற்று. காரணம் பாழாய்ப் போன அவளது வறுமை.
அழகையும், அறிவையும் அவளுக்கு அள்ளி வழங்கிய இறைவன், ஏன் அவளை ஏழையாக உற்பவித்தான்?
ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் ஒவ்வொரு சோதனை உண்டு. எனது உம்மத்தாருக்கு சோதனை செல்வம் தான்
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை யாருமே படித்துணர்ந்ததில்லையா?. ஏழை எளிய மக்களின் உணர்வுகளைப் புரியாமல் அவர்களிடம் வேலை வாங்குவதும், தொழுவதற்கு கூட அவகாசமளிக்காமல் மிருகங்களாய் நடாத்துவதும்.....
ஏன்? வாப்பாவும் அப்படித் தானே நடந்து கொள்கிறார் என்று நினைவு வரும் போது நெஞ்சுக்குள் நோவெடுக்கும். மனித சமுதாயத்துக்குள் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாட்டை தோற்றுவித்த அந்த தீய சக்தி எது? அந்த பூதம் இப்போது எங்கு போய் ஒழிந்து கொண்டது? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைத் தேடியே அலுத்துப் போயிருக்கிறான்.
அனாஸின் வாப்பா இரண்டொரு மாதங்களாய் மிகவும் பதட்ட நிலையில் இருந்தார். அடிக்கடி கோபப்பட்டார். சில நேரம் வழமைக்கு மாறாக பள்ளிவாசலில் அதிக நேரம் தங்கினார். அல்லாஹ{த்தஆலா அவரைச் சோதித்தான். அவர் தனது வியாபாரத்தில் நஷ்டமடைந்து கொண்டிருந்தார்.
இறைச்சிக்கறியும் மாசிச்சம்பலும் வெறும் நெத்திலிகளாய் மாறிப் போயின. முதலில் வீட்டார் அனைவருக்கும் மிகவும் கடினமாக இருந்தது. வாப்பா இப்படி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தததை கண்டறியாதவன் அனாஸ். அவர் தற்போது மனதளவில் உடைந்து போயிருந்ததாலும் வயதாகியிருந்ததாலும் அனாஸின் தலை மீது குடும்பப் பொறுப்பு வந்து விழுந்தது.
எனவே பத்திரகை ஒன்றில் விளம்பரம் பார்த்து கொழும்பில் பிரபலமான ஒரு கடைக்கு வேலைக்குப் போகவிருப்பதாய் வீட்டில் தெரிவித்தான். உம்மா ஓ... வென்று கதறியழுதார். தம்பி தங்கையரும் தான். வாப்பா வலது கையால் இடது நெஞ்சை அழுத்திப் பிடித்தபடி அமர்ந்து விட்டார்.
பொஸ் எனும் அந்தஸ்து மகனை போக விடக்கூடாது என்று தடுத்தாலும் வயிற்றுப்பசி அந்த வரட்டுப் பிடிவாதத்தை விரட்டியடித்தது. போதாக்குறைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் நோன்பு வந்தது. நோன்பு வந்தால் பணக்காரர்கள் வீட்டில் எப்படியெல்லாம் விசேஷங்கள் இருக்கும். நோன்புக்கஞ்சி, பெட்டிஸ், ரோல்ஸ், பாலூதா.......இந்த ஓரிரண்டு வருடங்களாக் அனாஸின் வீட்டில் அப்படியிருக்க சந்தர்ப்பமில்லை. நோன்பு திறப்பதற்காக பள்ளிக்கு வருவோரை தரக்குறைவாக பேசும் வாப்பாவும் சிலநேரம் பள்ளிவாசலுக்கே போயிருக்கக்கூடும்.
புனிதமிகு ஐவேளைத் தொழுகையைக்கூட நேரத்துக்கு தொழ முடியாமல்; இப்படி அடிமைத் தனமாக நடாத்தப்படும் என்றும்;, வெறும் சோற்றையும் பருப்புக்கறியையும் வீட்டார்கள் உண்ண நேரிடும் என்று அனாஸ{க்கு யாராவது சொல்லி இருந்தால் கருவிலேயே கலைந்து போயிருப்பான். உம்மாவின் வயிற்றிலிருந்து கொண்டு அவருக்கு உதைத்தற்கு தண்டை தானோ இது என்று பல சந்தர்ப்பங்களில் எண்ணுவதுண்டு.
ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் தெஹிவளை சந்தியில் வைத்து றியாஸைக் கண்டு கதைத்தான் அனாஸ். அவன் தன் சகோதரியான ஸலீமாவைப்பற்றிக் கேட்ட போது சிறிது நேரம் மௌனம் காத்தான் றியாஸ்.
ஆம். அவள் மணமுடித்து விட்டாளாம். மனசு விம்மியது. வாப்பா மட்டும் சம்மதித்து இருந்தால்...அன்றே ஹலீமா தனதாகியிருக்கக் கூடும். வறுமையைக் காரணம் காட்டி அவனுடைய சந்தோஷங்களைத் தீயிட்டாரே. இப்போது நாமும் ஏழைகள் தானே..யாஅல்லாஹ்!
நீ போனதற்கு பிறகு உங்க வாப்பா ரொம்பவே உடைஞ்சு போயிட்டார். உம்மாவுக்கும் டயபெட்டிக்..சில நேரம் என் ஆட்டோவில் உங்க வாப்பாவும் உம்மாவும் ஹொஸ்பிட்டலுக்கு போவாங்க...உங்க வாப்பா இப்ப ரொம்ப பாசமா எங்களோட நடந்துக்குறாரு..
றியாஸ் கூறிக்கொண்டு போனான். ஆனால் அனாஸின் மனது வெட்டுப்பட்ட பாம்பு கிடந்து துடிப்பதைப் போல துடித்தது. என்ன செய்ய? கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.
தனக்கு இப்போது முப்பத்திரெண்டு வயதாகிறது. அது வரை ஹலீமா இருப்பதும் நியாயமில்லை தானே. வாப்பா திருந்தியதை நினைத்த போது சந்தோஷம் இல்லாமலும் இல்லை.
முதலாளி வர்க்கம் மட்டும் நன்றாக இருந்தால் அன்றாட ஜீவனோபாயத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வயிற்றுப்பாடு என்னவாகும். பல்வேறு மேடைகளில் அதிதியாயிருந்தவர்கள் இப்போதெல்லாம் எப்படி வறுமை பட்டிருக்கிறார்கள்?
வறுமை என்ற ஒரே காரணத்துக்காக கணவன்களைப் பிரிந்து வெளிநாடு செல்லும் எத்தனை மனைவிமார்கள்? அங்கு தமது கற்புக்கு கூட பாதுகாப்பில்லாத நிலையில் திண்டாடுவதை எத்தனை பேர் தைரியமாக வெளியிலோ அல்லது கணவரிடமோ கூறுகிறார்கள்? பெண்பிள்ளைகளையும் ஆண்பிள்ளைகளையும் வெளிநாடுகளில் விட்டுவிட்டு மனநோயாளியாகியிருக்கும் எத்தனை வயோதிப பெற்றோர்?
நம் நாட்டில் இருக்கும் செல்வச் சீமான்கள் எல்லோரும் வறுமைப்பட்டவர்களுக்கு கொடுத்து உதவினால் அவர்கள் சிறுமைப்பட்டு இப்படி சீரழியத் தேவையிருக்காதே. ஊருக்கு காட்டுவதற்காக ஸகாத் கொடுக்கிறோம் என்று மார்தட்டி வெறும் இரண்டாயிரமோ, ஐயாயிரமோ கொடுத்து விட்டு அதையும் ஊரறியச் செய்து பெருமைப் படுபவர்கள், நாளை மறுமையில் என்ன சொல்லி அல்லாஹ்விடம் தப்பப்போகிறார்கள்? பணக்காரர்களுக்கு மாத்திரம் இப்தார் விருந்தும் வலீமா விருந்தும் கொடுக்கும் சில வள்ளல்கள் உற்றார் உறவினரை மதிக்காமல் என்ன சாதனை செய்வதாய் நினைத்துக் கொள்கிறார்கள்?
தன் சொந்த சகோதரியினதோ, சகோதரினனிதோ கன்னிப்பெண்கள் சீதனக் கொடுமையால் பிழியப்பட்டு திருமணத்துக்காக காத்திருக்க, அதற்கு உதவாமல் வெறும் வியாபார நோக்கத்தை மட்டும் கொண்டு ஏழெட்டு முறை ஹஜ் செய்பவர்கள் ஹாஜியார் பட்டத்தைத் தவிர வேறு எதைப் பெறப் போகிறோம் என்று சிந்தித்துப் பார்ப்பதில்லையா?
நாமெல்லாம்; மறுமையில் ஹாஜியார்களாக மதிக்கப்படுவோமா அல்லது ஹாஜி யார்? என்று கேட்கப்படுவோமா என்று அவர்கள் பயப்படுவதில்லையா? மனிதனை ஏமாற்றும் இந்தப் போலி உலகத்தை நம்பி நிரந்தரமான மறுமைக்காக உழைக்காத, உழைக்க விடாத எத்தனை மனித ஜென்மங்கள்? என்று பலவாறு சிந்தித்து களைத்துப் போனான் அனாஸ்.
எப்படியெல்லாம் வசதியாய் வாழ்ந்தவன்...இப்போது மா மூட்டை தூக்க வேண்டும். இரவு பதினொரு பன்னிரெண்டு மணி வரை கடையில் வேலை செய்ய வேண்டும். உணவைப்பற்றி சொல்லத் தேவையில்லை.. உப்புமிருக்காது. புளியுமிருக்காது. பொறுமையாளர்களுடன் தானே அல்லாஹ் இருக்கிறான். எனவே சலித்துக் கொள்ளாமல் மிகவும் பொறுமையாக இருந்தான். இந்த பெருநாளைக்காவது ஊருக்குப் போய் வாப்பா உம்மாவுடன் சேர்ந்து சாப்பிடணும்....அவர்களுக்கு சந்தோஷம் தருமளவுக்கு தம்பி, தங்கையருக்கும் உட்பட புது ஆடைகள் கொண்டு போக வேண்டும். பெ;போதோ வரவிருக்கும் பெருநாளை எண்ணி இப்படி இன்னும் இன்னும் என்னெனனவோ சிந்தனைகள் அவன் உள்ளத்தில் அலை மோதின.
என்னடா கனவு காணுறியா என கேட்டவாறு முதலாளி இடியப்பத்தால் நிறைந்த வயிறைத் தடவிய படி ரூமுக்கே வந்து கேட்டார். திடுக்கிட்டு எழுந்த அனாஸ் மெதுவாக நழுவி கடைக்குச் செல்ல ஆயத்தமானான். அவனது கன்னத்தில் கண்ணீர் கோடிட்டது. அது அவனுக்கு நெருப்பு போல சுட்டது. அவன் அடிக்கடி இப்படி கண்ணீர் சொரிவதுண்டு. அதனால் அவனுடைய கவலைகள் சுக்கு நூறாகிறதோ என்னவோ? அவனது தேனீர் கோப்பையில் ஈயொன்று விழுந்து இறந்திருந்தது.

No comments:

Post a Comment