Thursday, May 20, 2010

அவள் அவனுக்குச் சொந்தம் !

ப்ளீஸ் ரவி நான் சொல்றத கேளுங்க ரவி ரவி

அவன் அவளை திரும்பியும் பார்க்கவில்லை. முன்பிருந்தவனா இவன்? என்ன நினைப்பு? என தனக்குள்ளேயே கூறிக்கொண்டு திரும்பிய சுகிர்தா ஒரு கணம் அதிர்ந்தாள்.

அவளருகே... நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தபடி சதீஷ் எதிர்ப்பட்டான். கணநாக்கி நடக்கத் தொடங்கினாள். அரை மணி நேரத்தில் வீட்டை அடைந்த போது இவளின் அம்மா, அப்பாவுடன் மல்லுக்கு நின்றது தெளிவானது.

மெதுவாக குளியலறைக்கு சென்றவள் கதவைத் தாளிட்டு விட்டு குமுறி அழுதாள்.

சதீஷ்!

சொந்தமாக ஒரு கம்பனியை நடாத்துகிறான். அழகுக்கு குறைவில்லை. லேசான மீசை தாடியுடன் ஸ்மார்ட் ஆக இருப்பான். இவன் முதன் முதலாக சுகிர்தாவை காணும் போதே இதயத்தை இழந்துவிட்டான். என்றாலும் ஆண்டவன் சித்தம் இருக்க வேண்டுமே? 120 செக்கன் கழியும் முன்பே இவள் ரவியின் பின்னால் வலிய சென்று பேசுவதை அவதானித்தான். இந்த ஊமை நாடகத்தை சதீஷ் சமீப காலமாக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். அவனுடைய இதயக் கோவிலில் சுகிர்தா என்று குடியேறுவாளோ?

அம்மா சாப்பிட்டாச்சா? என்ற படி புத்தம் புது மலராய் பாத்ரூமிலிருந்து வந்தாள் சுகிர்தா. மனசோ சலனப்பட்டுக் கொண்டிருந்தது. மனசிலுள்ள கவலைகளை அம்மாவிடம் கூறி அவளை சங்கடத்தில் சிக்க வைக்க நினைக்கவில்லை. என்றாலும் அம்மாவிடம் சொல்ல வேண்டும் போலிருந்தது.

இதோ வந்திடறேன்மா என்ற படி அடுக்களையிலிருந்து வந்த அம்மாவுக்கு மகளின் முக மாற்றம் புலப்பட வெகுநேரம் எடுக்கவில்லை.

என்னம்மா ஒரு மாதிரி இருக்கே? என்ற அம்மாவின் கேள்வி சுகிர்தாவின் கண்களில் நீர் வரச் செய்யவே பதறிப் போனாள் அம்மா. ரவியை கண்டது முதல் சதீஷிடம் அவமானப்பட்டது வரை ஒன்று விடாமல் கூறினாள். அவற்றை எல்லாம் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு நிதானமாக அம்மா கூறிய பதில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

வேண்டாம் விட்டுடு. நம்மள மதிக்காதவனை நீ ஏன் தேடிப் போற? அந்த தம்பி பேரென்ன சதீசு, அது சொன்னது கரெக்டு. நீ ஏன்மா வலியுற?

சாத்தி வைத்து சவுக்கால் அடித்தது போலிருந்தது. என்ன இந்த அம்மா இப்படி பேசுகிறாள்? மற்றவர்களை விட அம்மா புரிவாள் என்றல்லவா கூறினேன். இல்லை அது பொய் என்பதைப் போல அம்மா நடந்துக்கிறாளே?

இறைவனே! உன் படைப்பினங்களில் யாருமே இதயத்தோடு படைக்கப்படவில்லையோ?

அம்மா நீ என்ன பேசற? ரவியை மறந்திட்டு.... எப்படிம்மா...?

சுகிர்தா அப்படி வலிமையாக கூறிய போது தாயுள்ளம் தப்பு செய்தது போல தவித்தது. விடிய விடிய நீரை இறைத்து விட்டு கடைசியில் குடத்தை உடைத்துப் போட்டது போன்ற குற்ற உணர்வு அம்மாவை ஆர்ப்பரித்துக் கொண்டது.


மறு நாள் க்ளாஸ் போய் வரும் போது பாதையைக் கடக்க முயன்றாள்.
க்ரீச்!!!
அவ்வளவு தான் சொல்லி வைத்தது போல எங்கிருந்தோ வந்த சதீஷின் காராசாரமான வார்த்தைக்குள் செவிப்பறை கிழிந்து நின்றான் டிறைவர். மீண்டும் அவள் பக்கமாக திரும்பி

என்ன சுகி.. கொஞ்சம் அக்கம் பக்கமா பார்த்து வரக் கூடாதாம்மா.... என்றான்.முழுமையாக அவன் வார்த்தைகளுக்குள் சுருண்டு போனாள் சுகிர்தா.

சுகி யாமே...? அந்த வார்த்தையில் தான் எத்தனை இதம்? எத்தனை மென்மை? ஓ... பட்டாம் பூச்சி சிறகடித்தது.

ஒரு கணம் தான். திடீரென மூளைக்குள் சந்தேகப் பொறி தட்டியது. என் பெயர் எப்படித் இவனுக்குத் தெரியும்? வெகுவாக குழம்பியவள் அதைக் கேட்க வாயைத் திறந்து ஏமாந்தாள். அவன் எப்போதோ போய் விட்டிருந்தான்.

பெயர் எப்படித் தெரியும்? அவன் தான் இவளைக் காதலிக்கிறானே? அந்த காதல் செய்த மாயம் தான். எனினும் தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தவில்லை. அப்படித்தான் அவன் வெளிப்படுத்துவது நாகரீகமில்லையே? இன்னுமொருவனை அவள் விரட்டி விரட்டி காதலிக்கும் போது அவன் எப்படிச் சொல்லுவான்? அப்படித்தான் சொல்லி விட்டாலும் சுகிர்தா அதை ஏற்பாளா? அல்லது தெரிந்து தெரிந்து என்னை லவ் பண்றியேன்னு அவனை தப்பாக நினைக்க மாட்டாளா? அதனால் தான் சதீஷின் காதல் மனசினுள்ளே விம்மிக்கிடந்தது.



அந்த சம்பவத்துக்குப் பின் அவளது மனம் அவன் பின்னால் அலை பாயத் தொடங்கியது. இந்த விசித்திரத்தைக் கண்ட அவளுக்கே தன்னை நம்ப முடியாமல் தவித்தாள்.

அவள் அவனை காதலிக்கிறாளா?

ச்சே! காதல் என்ற நோய்க்குள் தன்னை பலி கொடுக்க தயங்குபவளாச்சே சுககிர்தா. என் மனசு எப்பவுமே என் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கும். என்று அடிக்கடி தோழிகளிடம் பெருமை பேசிய இவளுக்கு என்னவாயிற்று?
மனம் தடுமாறிற்றா?

இதென்ன யாராயிருந்தாலும் ட்றைவரை ஏசித் தானிருப்பார்கள். என்று சமாதானம் சொல்லிப் பார்த்தாள்.

இல்லையே யோசனை தவறி பாதையைக் கடந்தவள் நீ தானே என மனமும் மூளையும் அவளை அடங்கச் செய்தன.

மேய்ப்பவன் முட்டாளாயிருந்தால் ஆடு மாடு கூட அவனை மச்சான் என்றழைக்குமாமே? முட்டாள் போல டிறைவரை குற்றம் சொன்ன போது அவளது மனமும் மூளையும் கூட அதைத்தானா செய்தன?


ஒரு வாரத்துக்குப் பின்பு வேலைக்கு தெரிவாகி இருப்பதாக அவளுக்கு கடிதம் வந்தது. கடிதம் உட்பட முக்கியமான சில ஆவணங்களை எடுத்துக் கொண்டு மேனேஜர் அறைக்குள் நுழைந்தவளுக்கு தேள் கொட்டியது போலிருந்தது. இப்படி மாட்டிக் கொண்டாளே!

ஆனால் அவனோ அவளை தெரியாதது போலிருந்தான். அது அவளுக்கு வசதியாகப் போனாலும் உள்ளுக்குள் என்னவோ செய்தது.

அன்றைய மாலைப் பொழுதில் பஸ்ஸ_க்காக காத்துக் கொண்டிருந்த போது, எதிர்பார்த்த விதமாக ரவியை தூரத்தில் கண்டாள். இதயத்தில் வெளிச்சம் பரவியது.

ரவி! ரவி!!

அவன் சுகிர்தாவைக் கண்டவுடன் நடையின் வேகத்தை அதிகமாக்கினான். உடனே சாரியை சற்று தூக்கி கையால் பிடித்துக் கொண்டு வேகமாக செல்ல முயன்ற போது அவளது தோளை ஒரு கை தொட்டது. சந்தேகமேயில்லை அது சதீஷ் தான்.

சுகி உன்னை புரிஞ்சிக்காதவன நீ எதுக்கு தேடிப் போகணும்? என்று அவன் ஒற்றையில் அவளை அழைத்த போது ஒரு பக்கம் ஆச்சரியம் கலந்த ஆனந்தமாகவும் மறுபக்கம் அதிர்ச்சி கலந்த கோபமாகவும் இருந்தது. ஆனாலும் இவ்வளவு இயல்பாக பேசுபவனிடம் எப்படி கோபப்படுவது? தன் மனம் தான் அவன் பக்கம் எப்போதோ ஈர்க்கப்பட்டு விட்டதென்பதை அவள் அந்த கணத்திலாவது கண்டு கொண்டுவிட்டாளே!

அவள் எதையும் பேசவில்லை...
என்ன யோசிக்கிற சுகி... அவனது குரல் இளகியிருந்தது. இப்போது சுகிர்தாவுக்கு கோபம் வரவில்லை. தன் மேனேஜர் என்பதால் சற்று நிதானித்து...
ஒன்னுமில்ல சேர் என்றாள்.

ம்ம் என்னை பெயர் சொல்லியே கூப்பிட உனக்கு அனுமதி தர மாட்டேனாடா?

தேக்கி வைத்திருந்த காதல் வெள்ளம், வார்த்தைகளாய பீறிட்டுக் கிளம்பியது. சற்று தயங்கியவள் சமாளித்துக் கொண்டு

ஓகே சதீஷ்! நீங்க என்ன தப்பா விளங்கிட்டீங்க. நான் அவர் பின்னால அலையவில்ல. யாரையும் நான் காதலிக்கவுமில்ல..

என்ன சொல்ற சுகிம்மா? குரலில் உற்சாகம் ஒட்டிக் கொண்டது.

ஆமா சேர்..சொரி சதீஷ்! அவர் எங்கள் அண்ணா. அவர் வேற்று மதப் பெண்ணைக் காதலிக்கிறார். அதை அம்மா அப்பா விரும்பவில்லை. அதனால வீட்டை விட்டு போயிட்டார். அதனால அவரை எங்கு கண்டாலும் கெஞ்சி வீட்;டுக்கு கூப்பிடுறேன்...

சுருக்கமாக முழுவதையும் கூறிய போது தான் அவளை அவமானப்படுத்திய சம்பவங்கள் சதீஷின் கழுத்தை நெரித்தன. மிகவும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான்.

ஒரு வாரத்துக்குப் பின் ரவி; அண்ணா வீட்டுக்கு வந்தார். ஆனந்தத்துடன் வந்தவள், அவர் கூறியவற்றைக் கேட்டு பரவசமடைந்தாள். ஆம். அன்றொரு நாள் அம்மா அப்பாவிடம்

என் பிள்ளைகள் படிச்சவங்கள். அவங்கட ஆசைப்படி செய்து வைங்கோ என்றிருக்கிறாள். அது தான் அப்பா என்னிடம் வந்து... என்று விட்டு நிறுத்தினார். நேரம் பார்த்து அம்மாவும் அப்பாவும் அவ்விடத்தில் பிரசன்னமானார்கள். அப்பா தான் முதலில் கூறினார். அம்மாவும் ஆமோதித்தார்.

ரவியின்ர விஷயம் சரியாகிட்டு... அத்தோட உன்ர விஷயத்தையும்... என்ற போது முகம் வெளிறினாள் சுகிர்தா. ஏனோ சதீஷ் மனத்திரையில் வந்துதித்தான். அந்த மாற்றத்தைப் புரிந்த அம்மா...

ஆமாம்டா. அந்த சதீசு தம்பி நம்மகிட்ட ஏற்கனவே பேசிட்டாரு.நமக்கெல்லாம் ஓகே. நீ என்னம்மா சொல்றே? என்றாள். பூவருகில் வண்டை நிறுத்தி தேன் பருக ஆசையா என்று கேட்டால் என்ன பதில் சொல்லும் வண்டு?

மனசுக்குள் குடிகொண்டிருந்த அந்தக் கள்வனின் கள்ளத் தனத்தை ரசித்தாள். நாளை காலை அவனை எப்படி பார்த்து... எப்படி பேசுவாள்?

இதையெல்லாம் எண்ணி நாணிச் சிவந்து ஓடிப் போய் தன் உருவத்தை கண்ணாடியில் பார்த்து தானே சிரித்துக் கொண்டு மகிழ்ந்தாள் அவள்!!!

(நிறைவு)

No comments:

Post a Comment