Thursday, May 20, 2010

தவிப்பு !

ஏன் இன்னிக்கு இவ்ளோ லேட் பொய்க் கோபத்துடன் ஷாமிலா கேட்டாள்.
இல்ல செல்லம். ஒபிஸ்ல சரியான பிஸிடா. அது தான்; என்று கூறிக் கொண்டே அவளிடம் குனிந்தான்.
இரு வீட்டாராலும் தம் காதலுக்கு எதிர்ப்பிருந்த போதும், பொறுத்திருந்து..பெற்றோரின் சம்மதத்துடனேயே தன் இனிய காதலியைக் கைப்பற்றியவனல்லவா அஸ்வின்! இன்றைக்கு மூன்று வருடங்கள் கடந்தும் யாரும் அவர்களை தம்பதியராய் நோக்க மாட்டார்கள். காரணம் இவர்களுக்கிடையே காணப்பட்ட இரக்கமும் நெருக்கமும் தான்.
என் அஸ்வின் ரொம்ப நல்லவன்
இப்படித்தான் தன் கணவனைப்பற்றி நேற்று வரை பெருமை பட்டுக்கொண்டிருந்தாள் ஷாமிலா.
ஆனால் இன்று..திருஷ்டி பட்டதைப்போல...
இறைவனே ஏனிந்த சோகம்?
அஸ்வின் அப்படிப்பட்டவன் என்று யார் தான் நினைத்தார்கள்? இல்லை. அவன் அப்படிப்பட்டவனில்லை என்று ஆறுதலடைய அவளால் முடியவில்லையே?
நித்யா!
இந்த மனக்குமுறலுக்கெல்லாம் காரணம் நித்யா என்பவளுக்கு அஸ்வின் எழுதியிருந்த கடிதம் தானே? பீரோவைத் திறக்கையில் வந்து விழுந்த பைலிலிருந்து; தானே அஸ்வின் பாதி எழுதி விட்டு வைத்திருந்த அந்தக்கடிதம் இவளுக்குக் கிடைத்தது.
தன் கற்பனையை ஓட விட்டுப் பொருமினாள். வயிற்றெரிச்சலாயிருந்தது. சாப்பிடப்பிடிக்வில்லை. குளிக்கவுமில்லை. தன் மணவாழ்வின் இதுவரையும் செய்திராத ஒன்று இன்று அரங்கேறியது.
ஆம். குப்புறப்படுத்து அழுதாள் ஷாமிலா.
பொழுது சாயும் நேரம் மிகவும் களைத்துப் போய் வந்த அஸ்வின், புன்னகையால் தன் களைப்பைப் போக்கும் ஷாமிலா எங்கே என கண்களால் வீடு முழுக்க தடவினான். பளிச்சென அவன் முகம் மிளிர்ந்தது. ஓ.. மூடு வந்து விட்டது போல. தனக்குத்தானே கூறிக்கொண்டவன் உற்சாகத்துடன் படுக்கை அறையை நெருங்க நெருங்கத் தான் பயம் கௌவிக் கொண்டது.
குப்புறப்படுத்து விம்மிக் கொண்டிருந்த ஷாமிலாவின் நெற்றியில் கைவைத்துப்பார்த்து பதறினான். அல்லாஹ்வே..இப்படி கொதிக்குதே..என்று கலவரப்பட்டான்.
பதறிக் கொண்டிருந்தவனை மெல்ல கண்விழித்துப் பார்த்தாள் ஷாமிலா.
என் மேல் தான் எவ்வளவு அன்பு என்ற எண்ணம் தோன்றி மறையும் முன்பே சீ..என்னமாய் நடிக்கிறான் ராஸ்கல் என்று எண்ணி அவனது கையை விலக்கி விட்டு விருட்டென எழுந்து குளியலறைக்குச் சென்றாள்.
எல்லாமே புதிதாக இருந்தது அஸ்வினுக்கு. பசியோடு அமர்ந்திருந்தவனுக்கு ஷாமிலாவின் திடீர் மாற்றத்தை ஜீரணிக்க கஷ்டமாக இருந்தது.
அவளை முதன் முதலில் சந்தித்தது ஒரு விபத்தில் தான். அதுவும் அவனது காரிலேயே! செல்போனில் சுவாரசியமாக உரையாடிக் கொண்டு வந்தவள் மஞ்சட்கடவையில் அல்லாமல் பாதையைக் கடக்க முற்பட்டாள்.
க்ரீச்!
மறுநிமிடம் இமைகளால் விழிகளை மூடிக்கொண்டாள். சொல்லி வைத்தாட் போல பொலீஸ் சூழ்ந்து கொண்டது. பொலீஸ் அதிகாரி இவனை ஜீப்பில் ஏறச் சொன்னார். பெண்கள் தவறு செய்தாலும் ஆண்களின் தலையில் தானே விடிகிறது என்று நினைத்துக் கொண்டவன் தன் விதியை நொந்வாறு வேறு வழியின்றி ஜீப்பில் ஏறிக் கொண்டான்.மூன்று நாட்கள் கழிய இன்னும் இரண்டு மணித்தியாலம் இருந்தது.
அப்போது
உங்கள விட்டாச்சி..வீட்டுக்குப் போகலாம் என்று கான்ஸ்டபிள் சிங்களத்தில் கர்ஜித்தான். வெளியே வந்த போது ஷாமிலா அவனுக்காக காத்திருந்தாள்.
என்ன நினைத்தானோ அவளிடம் மன்னிப்புக் கேட்டான் அஸ்வின்.
தவறு செய்தவள் அவள். அவனை மன்னிப்பதா?
இல்ல மிஸ்டர்........ அவள் தடுமாறிய போது
அஸ்வின் என்று முடித்து வைத்தான்.
நீங்க தான் என்னை மன்னிக்கணும். நான் தான் பிழை செய்தேன்
எப்படியோங்க...உங்களால் அவர்களுக்கு செமலாபம் என்று கூறி சிரித்தான். அந்த சிரிப்பில் அவள் சொக்கிப் போனாள்.
ட்ரிங்..ட்ரிங்...
சுய நினைவுக்கு வந்த அஸ்வின் ரிஸீவரைக் காதுக்குக் கொடுத்தான்.
ஹலோ யாரு நித்தியா..சொல்லு. ஓகே வர ட்ரை பண்ணுறேன் பேசிக்கொண்டிருந்தான்.
மீண்டும் நித்தியாவா? எத்தனை நாளா நடக்குது இந்த நாடகம்..குளித்துக் கொண்டிருந்தவள் குரூரமாய் சபித்தாள். அஸ்வினுடைய நினைவுகளோ தான் ஷாமிலாவைக் காதலித்த காலங்களை அசை போட ஆரம்பித்தது.

கம்பனியில் புதிதாய் வேலைக்குச் சேர்ந்தவளைப் பற்றியே அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் ரொம்ப அழகாய் இருப்பதாய் கூறினார்கள். பார்ப்போமே என்று அலட்சியமாய் வந்தவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. மனசு ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது. புன்னகை ஒன்றை மட்டும் அன்று பகிர்ந்து கொண்டார்கள்.
ஒரு நாள் தன் உம்மாவுக்கு சுகமில்லை என்று ஷாமிலா வராதிருந்த ஒரு நாளின் போதே..தான் ஷாமிலாவுக்குரியவன் என்பதை அஸ்வின் தெரிந்து கொண்டான். பின்பு அவர்கள் தத்தமது இதயங்களை பரிமாறியதும்....அவள் வீட்டில் தோன்றிய எதிர்ப்பலைகள் அஸ்வினின் நடத்தை கண்டு ஓய்ந்ததும், ஷாமிலாவின் குணம் கண்டு அஸ்வினின் பெற்றோருக்கு அவளை பிடித்துப் போனதும் பழைய ஆனால் இனிய கதை.

குளியலறைக் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். டவலுடன் வந்து கொண்டிருந்தாள். ஆனால் அவளை ரசிக்கும் மனநிலையில் அவன் இருக்கவில்லை. மிதித்து விட்டது போல் சென்றாளே..
எழுந்து சென்று பாதி எழுதி விட்டு வைத்திருந்த அந்த கடிதத்தை எழுதத்தொடங்கினான்.
எதேச்சையாக வந்தவள் அவன் பின்னாலிருந்து அவன் எழுதுவதை வாசிக்கத் தொடங்கினாள்.
அதில்
........................... நித்தி.. ஸொரிடா. உன் ரூமில் வந்து உன்னைப் பார்க்க முடியவில்லை.....
இப்படி தொடர்ந்து எழுதி நிறைவு செய்தான்.
அன்றைய இரவு இருவருக்கும் நரகத்துக்கு இட்டுச் சென்ற பாலமாக இருந்தது. எனினும் ஷாமிலாவின் நெஞ்சம் பாறையாய் இறுகியிருந்தது. ஸொரி டா வாமே..அந்தளவுக்கு நெருக்கமோ...அழுகை வந்தது. ஆனால் அழவில்லை. துரோகிகளுக்காக அவள் ஏன் அழ வேண்டும்? அத்தோடு விட்டால் கூட பரவாயில்லை. ரூமில் போய் பார்க்க முடியவில்லையாம். நெஞ்சு வெடித்து விடும் போல் இருந்தது. உலகமே ஒன்றிணைந்து தனக்கு சதி செய்வது போல் உணர்ந்தாள்.
சற்று திரும்பியவளின் கண்களுக்கு அஸ்வினின் புகைப்படம் தென்பட்டது. இந்த..இந்த சிரிப்பில் தானே அவளது கன்னி மனம் பறிபோனது. அவனின் சிரிப்பழகை ரசிக்கவென்றே எத்தனை ஜோக்குகளை தேடிச் சொன்னாள்? திடீரென அது ஆள்மயக்கிச் சிரிப்பு போல் தோன்றியது.
எல்லா ஆண்களுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.. அந்த மாதிர பொறுக்கிகளை மரத்தில கட்டி வச்சி சுடணும். பிறகு கழுகு கொத்தணும்...
என்று கணவனால் ஏமாற்றப்பட்ட தன் தூரத்து உறவினர் ஒருத்தி சொல்லியிருந்தாள். அது நடந்து அரை ஆண்டுகள் கழிந்திருக்கும். ஆனால் இப்போது ஷாமிலா சொல்லிப் பார்த்த போதும் பொருந்துகிறதே..!
தான் பார்த்துப் பார்த்து காதலித்தவள்..மணம் முடித்து இன்று வரை தேனாய் தித்திப்பூட்டியவள் இப்படி சீறுகிறாள் என்றால், தன்னில் ஏதாவது பிழையிருக்குமோ என் மூளையைக் கசக்கி யோசித்தான் அஸ்வின். ம்ஹ{ம்..அப்படி சொல்லுமளவுக்கு எதுவுமில்லை. எதற்காகவாவது சற்று உரத்துப் பேசினாலும் சிரித்துக் கொண்டே கேட்டு விட்டு பிறகு அதற்குத் தண்டனையாக முத்தம் கேட்பாள். இன்று என்னவாகிற்று?
தமக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த பிரிவு பற்றி ஈரேழு வாரங்களாக அவள் எதுவுமே கூறாததில் குழம்பிப் போனான் அஸ்வின். எங்காவது போய் வந்தால் நன்றாக இருக்கும் போல் இருந்தது. அவளிடம் சொல்லாமலேயே டவுனுக்குச் சென்றான்.
ஷமி...நீ நடந்நுக் கொள்றது கொஞ்சமும் பிடிக்கல.... அவன் சொல்லி விட்டு திரும்pப் பார்த்த போது அவள் அங்கிருந்தால் தானே? முதன் முதலாக அவள் மேல் கோபம் கோபமாய் வந்தது.
நித்தி!
ஷாமிலா சொல்லிப் பார்ததாள். எரிச்சலாக இருந்தது. சற்று நேரத்தில் குமட்டிக் கொண்டு வர காரணமறிந்து பூரித்துப் போனாள். ஆனால் அந்த சந்தோஷம் வெகுநேரம் நிலைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் முடிவு கட்ட எண்ணிக் கொண்டிருந்தவள் இப்போது விக்கிக் கொண்டு அழுதாள். தான் மோசம் போனதாய் தனக்குள்ளே கற்பனை பண்ணி மனம் சோர்ந்து போனாள்.
மாலை நேரம் அஸ்வின் தன் நண்பன் ஒருவனுடன் வீட்டுக்கு வந்தான். அவனை இதுவரை ஷாமிலா கண்டதில்லை. அவர்கள் தத்தமது அலுவலக வேலையில் முழ்கிப் போயிருந்தார்கள். வந்தவர்களுக்கு ஒரு கப் டீயாவது கொடுக்காவிட்டால் நல்லாயிருக்ககாது என்று அவளுக்குத் தெரியும். எனவே நாகரீகம் கருதி தேநீர் தயாரிக்க சமையலறைப் பக்கம் சென்றாள். அவர்கள் பேசுவது அவள் காதுகளுக்கு கேட்டது.
இடையில் அஸ்வின் சொன்னான்..
உன் ரூமுக்கு வர நினைச்சன்டா நித்தி;. ஆனால் கொஞ்சம் வேலையா இருந்தது.. உன் இனிஷியல் என்னானு சொல்லு. பயோடேட்டாவை டைப் பண்ணிடலாம்?
அதற்கு அந்த மற்றவன் கூறினான்...
உன் லெட்டர் கிடைச்சதுல சந்தோஷம்டா. நீ வருவன்னு நினச்சன்..பட். பரவாயில்ல .என் முழுப்பெயர் எஸ். ஏ. நித்தியானந்தன்..
ஓகே மிஸ்டர் நித்தியானந்தன். கண்களில் குறும்புடன் அஸ்வின் கூறினான்.
ஓ.. நித்தியா னந்தன்!
ஷாமிலாவுக்கு எல்லாம் புரிந்தது. இவனுக்கு எழுதிய கடிதத்தைப் பார்த்துத் தான் அவள் அப்படி குதித்திருக்கிறாள்..அஸ்வினைப் பற்றி தவறாக நினைத்ததை எண்ணி மனசு வலித்தது.
எதையும் காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டு டீயும் வடையும் கொடுத்த போது அஸ்வின் மெதுவாக அவளை ஏறிட்டான். அவனுக்கு எக்ஸ்ட்ராவாக ரொமான்ஸ் புன்னகையும் கொடுத்தாள். ஏதோ சொல்ல நினைத்த நித்தி அதைக் கண்டு புரிந்தவனான சொல்ல வந்தததை சொல்லாமலேயே விடைப் பெற்றுச் சென்றான்.
வெட்கத்தில் மிரண்டவள் தான் தாய்மை அடைந்த விடயத்தைக் கூறினாள். பிறகு தன்னுடன் சில நாட்களாக கோபம் காட்டியது ஏன் என்று அவன் கேட்ட போது அசடு வழிய காரணத்தைக் கூறினாள். அவனுக்கு சிரிப்பு வந்தது. இப்போது அந்த சிரிப்பில் கள்ளம் இருக்கவி;லை.
அவனைக் கட்டியணைத்தாள் ஷாமிலா.
இப்படி ஒருவருக்கொருவர் அணைத்து மகிழ்ந்து எத்தனை நாட்களாகி விட்டன?
ஏய் விடு குளிச்சிட்டு வர்ரேன் என்றான் அஸ்வின்.
அவனை விடாமலேயே வேணாம் சேர்ந்து குளிக்கலாம் என்றாள்.
வெட்கம் விட்டு கூறியவளை தவிக்க விடாமல் அவனும் அணைத்துக் கொண்டான்!!!

No comments:

Post a Comment